Wednesday 27 January 2016

lesson-2

ஜோதிட கல்வி - பகுதி II


சூரிய மண்டலம் மற்றும் அதில் இருக்கும் கிரகங்கள் பற்றி தெரிந்து கொண்டோம். சூரியனும் , பிற கிரகங்களும் கோள் வடிவமாக இருக்கிறது அல்லவா? சூரியனை சுற்றி வரும் கிரகங்கள் நீள் வட்ட பாதையில் சுழலுகிறது அல்லவா?

ஆக வான் மண்டலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் அதன் செயல்களும் வட்டத்தின் அடிப்படையாகவே இருக்கிறது.இயற்கையில் உருவாகும் அனைத்து விஷயத்திலும் வட்டம் அடிப்படை வடிவமாகவே இருக்கும். வட்டம் வளரும்பொழுது கோளம், உருளை என முப்பரிமாணமாக மாற்றமடையும்.

கரு உருவாகும் பொழுது சூல் வட்டவடிவமாக இருக்கும். உலகின் முதல் விஞ்ஞான கண்டுபிடிப்பான சக்கரம் வட்டவடிவமானது என வட்டத்தின் சிறப்பை கூறிக்கொண்டே செல்லலாம்.

வட்டம் ஆரம்பமும் முடிவும் அற்றது. அதனாலேயே வட்டத்தின் அடிப்படையில் இயங்கும் பிரபஞ்சமும் தோற்றமும் முடிவும் அற்றதாக இருக்கிறது.

இத்தகைய வட்டத்தை தெரிந்து கொள்வது அவசியம்.

கணிதத்தில் வட்டத்தின் சுற்றலவு 360 டிகிரி என்கிறார்கள்.

வட்டத்தை இரண்டாக பிரித்தால்....இரண்டு... 180 டிகிரியாக மாறும்.

வட்டத்தை நான்காக பிரித்தால் ... நான்கு 90 டிகிரியாக மாறும்.

இதுவரை நாம் பிரித்தது செங்கோணமாக இருக்கும் வடிவங்கள். 90 டிகிரியை இரண்டாக பிரித்தால் 45 டிகிரி கிடைக்கும். ஆனால் அது செங்கோணம் அல்ல..

90 டிகிரியை மூன்று பிரிவுகளாக பிரித்தால் 30 டிகிரி என பன்னிரெண்டு பிரிவுகள் கிடைக்கும்.

30 டிகிரிக்கு கீழே பிரிக்க வேண்டும் என்றால் 1 டிகிரி என்பதே சரியான கோணமாகி 360 பிரிவுகள் கிடைக்கும்.





பன்னிரெண்டு பிரிவான 30 டிகிரியை ஓர் அடிப்படை அலகாக (Units) கொண்டு ஜோதிடத்தில் ஆய்வு செய்கிறார்கள். இந்த பன்னிரெண்டு பிரிவகளே ராசிகள் என அழைக்கப்படுகிறது.

பன்னிரெண்டு பிரிவுகள் எவ்வாறு அமைந்து இருக்கிறது என தெரிந்து கொள்ளவேண்டுமானால் ஓர் ஆரஞ்சு பழத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் சுளைகள் பன்னிரெண்டு இருப்பதாக கொண்டால், பூமியின் சுற்று பகுதியில் ராசிகள் அமைத்தவிதம் எப்படி இருக்கும் என யூகிக்க முடியும்.

ஜோதிட ஆய்வு செய்யுபொழுது கருத்துக்களை எழுத சிரமமாக இருக்கும் என்பதற்காகவே வட்டதின் மூலை பகுதிகளை சீராக்கி சதுர வடிவில் அமைத்திருக்கிறோம். மற்றபடி ராசி மண்டலம் என்பது வட்டவடிவம் தான், நமது செளகரியத்திற்காக அனைத்து பிரிவுகளும் சதுரத்தில் அமைந்திருக்கிறது.
மேலும் வட்டத்தின் சித்தாந்தம் குலையாமல் 30 டிகிரியாகவே அமைந்துள்ளது.

ராசி மண்டலத்தின் ஒவ்வொரு பகுதியும் அதற்கென ஓர் பெயரும் கிரக ஆதிக்கமும் கொண்டு அமைக்கபட்டுள்ளது. அதன் படம் கீழே..


















ராசி மண்டலம் பற்றிய பாடத்தின் வீடியோ காட்சி




-----------------------------------------------------------------------------------------------------------
கேள்வி நேரம் :


ஏன் மேஷம் என்ற ராசியை செவ்வாய் குறிக்க வேண்டும்? மகர ராசி - கும்ப ராசியை ஏன் சனி குறிக்க வேண்டும் ?
செவ்வாய் கன்னி ராசியை குறிக்க கூடாதா? என கேட்டால் எப்படி விளக்கம் சொல்லுவீர்கள்?

நன்றாக ஜோதிடம் தெரிந்தவர் என உங்கள் நண்பர் யாராவது இருந்தால் கேட்டுப்பாருங்கள்.
அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.
பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். விடையை அடுத்த பதிவில் இடுகிறேன்.

பதில் நேரம் :

சென்ற பகுதியில் கேட்கப்பட்ட கேள்வி :
கிரக ஆற்றல் மனித உடலில் வேலை செய்கிறது என்பதை நிரூபணம் செய்ய சென்னால் உங்களால் முடியுமா? 

இதற்கு பலதரப்பட்ட விளக்கம் வந்திருந்தது. கிரகணம் , கடல் அலைகள் என பல விளக்கங்கள். நான் கேட்டது மனித உடலில் கிரக வேலை செய்யும் என்றால்

எப்படி.

ஜோதிடத்தை பொருத்தவரை சூரியன் ஒரு கிரகம் அல்லவா? சூரியன் ஒளி மனிதனுக்கு கிடைக்கவில்லை என்றால் அதிக தோல்வியாதியால் துன்பபடுவான்.

வைட்டமின் ஈ மற்றும் டி கிடைக்காது.
கிரகம் என்றவுடன் ஒன்பது கிரகத்தையும் நினைத்து குழப்பிக்கொள்ளுகிறோம். சூரியன் எனும் கிரகம் மனித உடலில் வேலை செய்கிறது தானே?

எளிமையாக யோசிப்போம்..வளமை காண்போம் :))
-------------------------------------------------------------------------------------------------------------
சிரிக்க சில நொடிகள்

[ இந்த பகுதியில் சின்ன சின்ன நகைச்சுவை வெளிவரும். கணமான கருத்துக்களை படித்து விட்டு புன்சிரிப்புடன் நிறைவு செய்வோமே....]

கோவில் திருவிழாவில் “டாடி மம்மி வீட்டில் இல்லேனு தடைபோட யாரும் இல்லைனு” பாடிக்கிட்டு இருக்காறே, யாரு அவரு?

அவர் “வில்லு” பாட்டுக்காரராம்.

Tuesday 26 January 2016

lesson-1

ஜோதிட கல்வி - பகுதி I

ஜோதிடம் எனும் சாஸ்திரம் வேத சாஸ்திரத்தின் ஓர் அங்கம். ஜோதிடத்தை கண்டு பிடித்தது இன்னார் என சுட்டிக்காட்ட முடியாது. சாஸ்திரம் என்பது முற்றிலும் கண்டறியபட்ட மெஞ்ஞானம் என பொருள் கொள்ளலாம். ஜோதிடம் என்பதும் சாஸ்திரம் எனும் தலைப்பிற்கு கீழ் வரும் ஓர் மெஞ்ஞானமாகும். 

தனிஒரு மனிதனால் கண்டுபிடிக்கபட்ட எந்த ஒரு சித்தாந்தமும் விஞ்ஞானம் என்றே அழைக்கப்படும். சாஸ்த்திரங்கள் எல்லாம் யார் கண்டுபிடித்தார் என கூறப்படாமல் இருக்கும், காரணம் அவை இறையருளால் மனித இனத்திற்கு தரப்பட்டது என்பதே உண்மை.

வராக மிஹிரர், பராசரர் மற்றும் ஜெயமினி என்ற முனிவர்கள் கண்டுபிடிக்கவில்லையா என கேட்கலாம். அவர்கள் தெய்வீகம் எனும் நதி வழிந்தோடும் பகுதியின் கரையாக இருந்தார்கள். அதாவது ஜோதிட சாஸ்திரம் உலகுக்கு கொடுக்க இறைவனால் தேர்ந்தெடுக்கபட்ட கருவிகள். சில முட்டாள்கள் ஜோதிடத்தின் வரலாறை சொல்லும் பொழுது “ஆட்டு இடையர்கள் வானத்தை ஆராய நிறைய நேரம் கிடைத்தது அதனால் வானசாஸ்திரத்தை கண்டறிந்து முதலில் அவர்களுக்கு பிடித்த ஆட்டை ராசியின் வடிவமாக கொடுத்தார்கள்” என்கிறார்கள். சிறிது சிந்தித்து பாருங்கள் ஆட்டு இடையர்கள் கண்டறிந்தார்கள் என்றால் இன்றைய ஆட்டு இடையர்கள் ஏன் ஜோதிடர்களாக இல்லாமல் , புதிய கண்டுபிடிப்பு செய்யாமல் வெறும் ஆட்டுக்காரர்களாகவே இருக்கிறார்கள்? விட்டால் ஏசுநாதர் ஆடு மேய்த்தார் அவர்தான் முதல் வானியல் நிபுணர் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.

ஜோதிடத்தின் வரலாற்றை பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாம் ஓய்வாக இருக்கும் சமயம் அதை பற்றி பேசுவோம். இப்பொழுது ஜோதிடம் பற்றி அடிப்படை விஷயங்களை பகிர்ந்து கொள்வோம்.


கிரகங்களுக்கு உண்மையில் வேலை செய்யுமா?

உங்கள் நண்பர் ஒருவர் சாதாரண வாழ்க்கை வாழ்கிறார் என கொள்வோம். உடனடியாக அவரின் வாழ்க்கையை மேம்படுத்தி கோடீஸ்வரர் ஆக்க முடியுமா? 
.
.
.
.
முடியாது...
அவரின் சாதாரண நிலையிலிருந்து கீழ் இறக்கி ஒன்றுக்கும் ஆகாதவராக பிச்சை எடுப்பவறாக மாற்ற முடியுமா?
.
.
.
.
.
அதுவும் முடியாது.

உணர்வு நிலையில் தொடர்பு கொண்ட, கண்களால் பார்த்து உணரக்கூடிய உங்கள் நண்பரை இது போல மாற்றம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் பொழுது....

கண்களால் பார்க்க முடியாத.. உணர்வு நிலைக்கு அப்பாற்பட்ட கிரகம் இதை எல்லாம் செய்கிறது என்கிறார்களே அது எப்படி?

சுக்கிரன் வந்தது கோடீஸ்வரன் ஆனார், சனி வந்தது காணாமல் போனார் என்கிறார்களே?

கிரகத்திற்கு உண்மையில் சுயமான சக்தி கிடையாது.


புரிகிறது ... வேறு ஏதோ இணைய தளத்திற்கு வந்துவிட்டோமா என முழிக்கிறீர்கள்.

கிரக சக்தி கண்களுக்கு தெரிவதில்லை. அதனால் ஜோதிடம் இல்லை, கிரக சக்தி இல்லை என சொல்ல முடியாது.

அலைபேசியை உதாரணமாக கொள்வோம். அலைபேசியில் அதன் அலைகள் கண்களுக்கு தெரிவதில்லை. நம்மை ஒருவர் அலைபேசியில்அழைத்தால் அது எந்த திக்கிலிருந்து வருகிறது என நம் கண்களில் தெரிவதில்லை. அதற்காக அலைபேசி என்பது பொய் என நாம் எண்ணுவதில்லை. அதுபோல தான் கிரக சக்தியும்.

கிரகத்திற்கு சக்தி கிடையாது என கூறினேன். ஆனால் சக்தியே கிடையாது என சொல்லவில்லை. கிரகம் தனித்து இயங்காது. ஆனால் நட்சத்திரம் எனும் மாபெரும் சக்தி அதன் பின்புலத்தில் வேலை செய்தால் தான் இயங்க முடியும்.





அலைபேசி எப்படி வேலை செய்கிறது என்பதை ஆராய்தால் நட்சத்திரம் - கிரகம் - மனிதன் எப்படி இயங்குகிது என புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.


அலைபேசியில் ஒருவர் மற்றொருவருக்கு தொடர்பு கொள்கிறார் என்றால் முதலில் அந்த அலைகள் அருகில் இருக்கும் கோபுரத்திற்கு (TOWER) செல்லும் அங்கிருந்து அலைபேசி மாற்றிக்கு (Tele Exchange) செல்லும் பின்பு இதே செயல் நடந்து மற்ற அலைபேசிக்கு சென்றடையும்.

அது போலதான் நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல் கிரகத்தினால் பிரதிபலிக்கப்பட்டு நமது தாய் கிரகமான பூமிக்கும் எதிரொளிக்கப்படுகிறது. 

மனிதனும் மற்ற ஜீவராசிகளும் ஏன்.. அனைத்தும் இதனால் இயங்குகிறது.



எனவே நட்சத்திரம் இல்லாமல் கிரகங்களும், கிரகங்கள் இல்லாமல் நட்சத்திரமும் பூமிக்கு ஆற்றலை வழங்க முடியாது. இரண்டு விஷயங்களும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

இங்கு வானவியல் பற்றி பேசவேண்டும். வானவியல் (Astronamy) என்பது ஓர் விஞ்ஞான சித்தாந்தம். கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் மற்றும்விண்வெளி பற்றி ஆராயும் சித்தாந்தம். 

வானவியல் ஜோதிடத்தின் அடிப்படை என சொன்னாலும், முழுமையான வானவியல் நமக்கு பயன்படாது. கிரகங்களின் சுற்றுபாதை, சூரிய மண்டலத்தின் அமைப்பு இதுவெல்லாம் வானவியல் மூலம் நமக்கு கிடைக்குமே தவிர ஜோதிடத்தை பற்றி நாம் இங்கு பேசிய கிரக ஆற்றல் எனும் கருத்து வானவியலில் இல்லை.

சூரிய மண்டலத்தில் உள்ள வானவியல் கிரகங்கள் பார்ப்போம்.

1) சூரியன் 2) புதன் 3) சுக்கிரன் 4) பூமி 5) செவ்வாய் 6) குரு 7) சனி 8) யூரைனெஸ் 9 ) நெப்டியுன் 10) ப்ளூட்டோ

இதில் சூரியன் என்பது ஓர் நட்சத்திரம், மற்றவை அனைத்தும் கிரகம். இதில் ப்ளூட்டோ என்பது தற்சமயம் கிரகம் அல்ல என அறிவிக்கப்பட்டுவிட்டது.


ஜோதிட ரீதியான கிரகங்களை பார்ப்போம்.

1) சூரியன் 2) சந்திரன் 3) செவ்வாய் 4) புதன் 5) குரு 6) சுக்கிரன் 7)சனி 8) ராகு 9) கேது.

வானவியல் கிரகத்திலும் , ஜோதிட ரீதியான கிரகத்திலும் எத்தனை வித்தியாசம் பார்த்தீர்களா?
ஜோதிட ரீதியான கிரகங்களில் பூமி என்பது இல்லை, ராகு கேது என்பது புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.




இதற்கு காரணம் என்ன?
வானவியல் என்பது விண்வெளி பொருட்களை கொண்டு ஆய்வு செய்யும் ஓர் அறிவியல், ஜோதிடம் என்பது விண்வெளியில் இருக்கும் ஆற்றல் மண்டலங்களை பற்றி ஆய்வு செய்யும் ஓர் மெய்ஞ்ஞானம்.

நட்சத்திர மண்டலங்கள் மூலம் வெளிப்படும் ஆற்றல் ஆனது பூமிக்கு எந்த பகுதியிலிருந்து பிரதிபலிக்கபடுகிறதோ அந்த பகுதியை கணக்கில் கொண்டு ஆய்வு செய்வது ஜோதிடம். பூமி நாம் இருக்கும் இடம் ஆகையால் இங்கு வந்தடையும் ஆற்றலை தான் நாம் கணக்கிடுவோம், மாறாக பூமியை இதில் இணைக்க முடியாது.

ராகு கேது என்பது என்ன?

விண்ணில் எந்த புள்ளியில் நட்சத்திர ஆற்றல் பிரதிபலிக்கப்படுகிறதோ அப்புள்ளி நமக்கு மிகவும் முக்கியமானது. பூமியின் வட்டபாதையும், சந்திரனின் வட்டப்பாதையும் இணையும் இடத்தில் விண்கற்களோ, விண் தூசுக்களோ இல்லாமல் வெற்றிடமாக வெறுமையாக இருக்கும். இந்த புள்ளியில் ஆற்றல் அதிக அளவில் கடத்தப்படும். ( வெற்றிடத்தில் ஆற்றல் பரவும் என்பது விஞ்ஞான தத்துவமும் கூட)

ராகு-கேது புள்ளிகளில் பூமியின் நிழல் படிவதால் அதை சாயா கிரகம் ( நிழல் கிரகம்) எனவும் அழைக்கிறார்கள்.




ஜோதிட ரீதியான கிரகங்கள் எனும் பட்டியலை பார்த்தீர்களா? அதன் வரிசையை ஞாபகம் வைக்க எளிய வழி உண்டு. ஞாயிறு முதல் சனி கிழமை வரை மனதில் வரிசையாக சொல்லி அத்துடன் ராகு / கேதுவை இணைத்து கொண்டால் போதுமானது.

உலகின் அனைத்து காலண்டரிலும் கிழமை ஒன்றாக இருப்பதன் காரணம் புரிகிறதா?

கிரகத்தை பற்றி புரிந்து கொண்டோம். ராசி மண்டலத்தை பற்றி அடுத்த வகுப்பில் விளக்குகிறேன்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி நேரம் :

இன்றைய பாடத்தை பார்த்தோம். இதில் உங்களுக்கு ஓர் கேள்வி.

கிரக ஆற்றல் மனித உடலில் வேலை செய்கிறது என்பதை நிரூபணம் செய்ய சென்னால் உங்களால் முடியுமா? முடியும் என்பவர்கள் அதற்கு தக்க உதாரணத்தை பின்னூட்டம் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாக வோ சொல்லுங்கள். உங்கள் புத்திசாலித்தனத்திற்கான சவால்...
-------------------------------------------------------------------------------------------------------------------------
சிரிக்க சில நொடிகள்

[ இந்த பகுதியில் சின்ன சின்ன நகைச்சுவை வெளிவரும். கணமான கருத்துக்களை படித்து விட்டு புன்சிரிப்புடன் நிறைவு செய்வோமே....]

பண்பலை வரிசை [FM] தொகுப்பாளர்
ஜோதிடரே உங்களுக்கு பிடிச்ச பாட்டை சொல்லுங்க,போடறேன்...
ஜோதிடர் : “ நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்”-னு பாட்டு போடுங்க. இந்த பாட்டை என்கிட்ட ஜோசியம் பார்க்கறவங்களுக்கு டெடிகேட் பண்ணறேன்.
http://vediceye.blogspot.in/search/label/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF